மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Update: 2022-11-30 18:45 GMT

நாகை மாவட்டத்தில் மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கண்களை சுத்தம் செய்ய வேண்டும்

கண்வலி(மெட்ராஸ்- ஐ) ஒருவகை வைரஸ் பாதிப்பினால் உருவாகிறது. இதனால் கண்கள் சிவந்து வலியுடன் கூடிய தொற்று ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கண்களில் பிசுபிசுப்பான திரவம் சுரந்து கண்களை மூடிக்கொள்ளுவதால் கண்களை திறப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த தொற்று எளிதாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் குடும்பத்தினரிடையே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே எளிதில் பரவுகிறது.

கண்வலி நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகி முறையாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். சுய சிகிச்சை செய்து கொள்ள கூடாது.

திரவ சுரப்பினால் கண்கள் மூடிக்கொள்ளும் போது வெது வெதுப்பான வெந்நீரில் பஞ்சை நனைத்து பிழிந்துவிட்டு அதன் மூலம் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். வலியுள்ள கண்களை தேய்ப்பதோ, கசக்குவதோ கூடாது. டாக்டர்கள் அளிக்கும் கண் சொட்டு மருந்து அல்லது கண் மருந்தை உரிய நேரத்தில் உபயோகித்தால் கண்வலி நோய் விரைவில் குணமாகும். முகத்தை வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவுவதும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நோய் பரவுவது தடுக்க முடியும்.

7 நாட்களில் குணமடையும்

இது வைரஸ் நோயாக இருப்பதினால் உரிய சிகிச்சை செய்வதன் மூலம் 3 முதல் 7 நாட்களில் இந்த நோய் முழுவதும் குணமடைந்துவிடும். பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கோ அல்லது மாணவர்களுக்கோ கண்வலி அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

நாட்டு வைத்தியம், லென்ஸ் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். நோயாளிகளின் கண்களை தொடுவதையும் அவர்கள் உபயோகப்படுத்திய கைக்குட்டை, தலையணை, துண்டு ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்வதை தடுக்க வேண்டும். கண்வலி உள்ளவர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இருமல், தும்பல் வரும்போது நோயுற்றவர்கள் வாயை துணி கொண்டு மறைக்கவும். சிவந்த கண்கள் அனைத்தும் கண்வலி அல்ல. எனவே மருத்துவ கவனிப்பு அவசியம். உரிய மருத்துவம் செய்யாவிட்டால் கண்பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

25 பேருக்கு சிகிச்ைச

ஒரு தடவை கண்வலி வந்தால் மீண்டும் வராது என்பது தவறு. கண்வலி உள்ளவர்களை ஒரு தடவை பார்த்தாலே நோய் வரும் என்பது தவறு. நமது மாவட்டத்தில் கடந்த 1 வாரத்தில் 25 பேர் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்