24 வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடத்திற்கு மாற்ற உத்தேசம்

24 வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடத்திற்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-09 19:09 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும், வாக்காளர் பதிவு அலுவலருமான நிறைமதி சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் 18 குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் 6 என மொத்தம் 24 வாக்குச்சாவடிகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டு கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளன.

மேலும் குன்னம் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளின் பெயர்களை மாற்றியமைக்க கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளது. புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏதும் உருவாக்கப்படவில்லை. வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் நாட்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்திடவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்கள் வசதிக்கிணங்க இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கு பதிவு செய்ய ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1-ந்தேதிகளில் தகுதி நாளாக அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு பொதுமக்களுக்கு உதவி செய்திடும் பொருட்டு இதுவரை வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் தனித்தனியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்ய வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்