ஒரே நாளில் 238 பேருக்கு அபராதம்

நாகர்கோவிலில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 238 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதில் சிக்கிய கல்லூரி மாணவர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

Update: 2023-07-20 18:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 238 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதில் சிக்கிய கல்லூரி மாணவர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

வாகன சோதனை

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாலையில் நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், 3 பேர் பயணம் செய்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பயணம் செய்தது மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்கள் என கல்லூரி மாணவா்கள் 27 பேர் உள்பட மொத்தம் 45 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவற்றில் சில இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, 'போக்குவரத்து விதிகளை மதிப்போம், பின்பற்றுவோம்' என உறுதிமொழி எடுக்க செய்தனர்.

238 பேருக்கு அபராதம்

இதேபோல் மாநகருக்கு உட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், ஒழுகினசேரி, வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆசாரிபள்ளம் உள்பட பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 238 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் சங்கிலி மூலம் பூட்டு போட்டு பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட (நோ பார்கிங்) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதன்மூலம் மாநகரில் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்