குமரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22,918 பேர் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
பொதுத் தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடக்கிறது. இதுபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி வரையும் நடக்கிறது.
குமரி மாவட்ட முழுவதும் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுபோல் பிளஸ்-1 தேர்வை 22,186 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 23,346 பேரும் எழுதுகிறார்கள்.
தேர்வு மையம்
பிளஸ்-1, பிளஸ்- 2 தேர்வுகள் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 45 மையங்களிலும் நடக்கிறது. இதனை தவிர இரண்டு கல்வி மாவட்டத்திலும் தலா ஒன்று வீதம் தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மையங்களில் ஹால்டிக்கெட் நம்பர் எழுவது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளி தேர்வு மையத்தில் ஹால்டிக்கெட் நம்பர் எழுதும் பணியை கல்வி அதிகாரிகள் பார்வையிட்டனர்.
விடைத்தாள் மையம்
பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை வைக்கும் மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிளஸ்-1, பிளஸ்-2 வினாத்தாள்களை வைக்க தலா 7 மையங்களும், எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்களை வைக்க 8 மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுபோல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்களை 3 மையங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.