அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் ரூ.222 கோடி ஒதுக்கீடு
15 வார்டுகளுக்கும் ரூ.222 கோடி ஒதுக்கீடு
வீரபாண்டி,
அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் ரூ.222 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மண்டல கூட்டத்தில் மண்டல தலைவர் கோவிந்தசாமி கூறினார்.
மண்டல கூட்டம்
திருப்பூர் 3-ம் மண்டல கூட்டம் நேற்று நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் வாசு குமார் கலந்து கொண்டார். ்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
59-வார்டு கவுன்சிலர் தங்கராஜ்: மண்டலத்தில் 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கலாம் ஆனால் தற்போது வரை 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததோடு உரிய முறையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
33 வார்டு கவுன்சிலர்:- குப்பைத்தொட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை சேகரிக்க ஆட்கள் சரிவர வருவதில்லை. குப்பைத் தொட்டிகள் இல்லாததால் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சினை
51-வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்:- திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் விவாதம் செய்வது சரியல்ல. இவ்வாறு மண்டலக் கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. இதில் அதிகாரிகளும் கவுன்சிலரும் அவ்வப்பொழுது குறை நிறைகளை பேசி தீர்த்துக் கொண்டனர்.
வார்டுகளில் நடைபெறும் பணியை கொடுத்து கவுன்சிலருக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் பலரும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.
மண்டலத் தலைவர் கோவிந்தசாமி:- மூன்றாம் மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு மட்டும் ரூ. 222 கோடி ஒதுக்கப்பட உள்ளது. விரைவில் குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் வசதிகள் ஆகிய பணிகளை மேற்கொள்ள உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் படைப்பு போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை சரி செய்திட ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற தொடங்கியுள்ளதால் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். என்றார்.