போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 22 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 295 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிரடிசோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு சம்பந்தமாக காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மதுவிலக்கு சம்மந்தமாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 24 மணி நேரத்தில் மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 23 பேர் மீது 22 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 295 லிட்டர் சாராயம், 94 அரசு மது பாட்டில், சாராயம் கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்கள் உணர்ந்து அதை மக்கள் கைவிட வேண்டும். மதுவிலக்கு சம்மந்தமாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்(7598172009) அல்லது தமிழக அரசின் இலவச புகார் எண்-10581 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அல்லது அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.