ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-02 19:59 GMT

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சில பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் சுமார் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பயணி ஒருவரை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 4 விலை உயர்ந்த செல்போன்கள், மடிக்கணினி, 2 'ஸ்மார்ட் வாட்ச்'கள் இருந்தன. மேலும் உடலில் மறைத்து 359 கிராம் தங்கத்தையும் அவர் கடத்தி வந்ததும், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அலி அக்பர் (வயது 42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து செல்போன்கள், தங்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21 லட்சத்து 59 ஆயிரம் என்றும், மற்ற பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்