மினி லாரியில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பையில் மினி லாரியில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-18 20:30 GMT

அம்பை:

அம்பையில் மினி லாரியில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரிலும், அம்பை துணை சூப்பிரண்டு பல்வீர்சிங் அறிவுறுத்தலின் பேரிலும் அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், அம்பை மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

பின்னர் மினி லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மானூரை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிப்பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்