ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

உத்தமபாளையம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

Update: 2023-08-01 21:00 GMT

கம்பத்தை அடுத்த மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40). இவர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து ராமகிருஷ்ணன், சின்னமனூரில் இருந்து மாலையம்மாள்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். உத்தமபாளையத்தை அடுத்த துர்கையம்மன் கோவில் பகுதியில் அவர் வந்தபோது, எதிரே ஆம்னி பஸ் ஒன்று கம்பத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சும், ராமகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

அப்போது ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில், ராமகிருஷ்ணன் மீதும் தீப்பற்றியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பஸ்சில் வந்த பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து ராமகிருஷ்ணனின் உடலை சின்னமனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று காலை ராமகிருஷ்ணனின் உடல், அவரது சொந்த ஊரான மாலையம்மாள்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி, கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள், போலீசார் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அதன்பிறகு ராமகிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்