வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Update: 2022-10-31 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையின் போது இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் மூலமாக வெளியிடப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும். மேலும் அதிக மழை பொழிவு உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு, அதன் வழியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துணை கலெக்டர் நிலையிலான அனைத்து வட்டாரங்களுக்கும் ஒரு குழு அளவில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகளில் 55 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளும், 83 பகுதிகள் மிதமான பகுதிகளும், 71 பகுதிகள் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு அதில் 249 நிவாரண முகாம்கள் அமைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாய உணவு மையங்கள் அமைத்திட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு துறையினரால் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 176 மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் 2 நாள் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் வெளியில் வரும் பாம்புகளை பிடிக்க பாம்புபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி 4500 முதல் நிலை மீட்பாளர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகளில் அமைந்துள்ள 713 ரேஷன் கடைகளுக்கு வெள்ளக்கால அத்தியாவசிய பொருட்கள் ஒரு மாதத்திற்கு இருப்பு வைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5000 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.

50 படகுகள் தயார்

கால்நடைகளுக்காக 424 நிவாரண மையங்கள் அமைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிவதற்கு ஏதுவாக பொதுப்பணித்துறையினரால் 1208.92 கி.மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், ஊரகவளர்ச்சித்துறையினரால் 624.03 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், வெள்ளநீர் வடியும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை மூலம் 50 படகுகள் தயார் நிலையில் உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை மூலம் மழைநீர் தேங்கிய இடங்களில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படா வண்ணம் தடுக்க போதிய தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புன்னியக்கோட்டி, தனி தாசில்தார் (பேரிடர்) அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்