காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றம்...!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-05-13 09:00 GMT
காஞ்சிபுரம், 

அத்திவரதர் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் வரதராஜ பெருமாள் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா இன்று அதிகாலை 4  மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.

கொடி மரத்திற்கு விசேஷ மந்திரங்கள் ஓத சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.   இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, ஆன்மீக பிரமுகர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், வக்கீல்கள் வாசுதேவன், ரேவதி, சோழன் கல்வி குழுமத்தின் தலைவர் தொ.சஞ்சீவி ஜெயராம், கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்