கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக ஆலோசனை

காரைக்காலில் அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2022-05-09 18:31 GMT
காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடந்தது. புதுச்சேரி அரசின் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அக்பர்அலி தலைமை தாங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தலைமை செயலக அதிகாரி உதயகுமார், காரைக்கால் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், வட்ட ஆய்வாளர் சவுந்தரராசு, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தனியார் பள்ளிகள் எந்தெந்த வகையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் பள்ளி ஆவணங்களின் முழு விவரங்களையும் ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்