சிறந்த புதுச்சேரியை உருவாக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு
சிறந்த புதுச்சேரியை உருவாக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
சிறந்த புதுச்சேரியை உருவாக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு புதுவையில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள், அதனை எவ்வாறு மேம்படுத்துவது, மத்திய அரசின் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அனிபால் கென்னடி, பிரகாஷ்குமார், பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்பின் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு மத்திய மந்திரி எல்.முருகன் வந்தார். அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நீலப்புரட்சி
புதுவையில் மீன்வளத்துறை, கால்நடைத்துறை சார்பில் மேம்பாட்டு பணிகள், மீனவர்கள் மேம்பாடு குறித்தும், அதற்கான திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016-ம் ஆண்டு நாட்டிலேயே முதன் முறையாக நீலப்புரட்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் புதுச்சேரிக்கு ரூ.40 கோடி வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம், மீன்வள மேம்பாட்டு பணிகள் என மாற்றி செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் புதுவைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.145 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்படும்.
புதுச்சேரியில் மீன்வளத்துறை சார்பில் 2020-21ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதுச்சேரி, காரைக்கால் மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது.
சீர்மிகு கிராமங்கள்
மத்திய அரசின் சாகர்மித்ரா திட்டத்தின் இதன் மூலம் மீனவ இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுவையில் 32 கிராமங்கள் தேர்வாகியுள்ளன. சீர்மிகு கிராமங்கள் அமைக்க 4 கிராமங்கள் தேர்வாகி உள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் அந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
குளிர்பதன வசதி, மீன் உணவுகள் தயாரித்தல், நவீன மீன் மார்க்கெட் அமைத்தல் உள்ளிட்ட மீன் சார்ந்த இணைத்தொழில்கள் மேற்கொள்வதற்கு அட்டவணை இனத்தவர்களுக்கும், பெண்களுக்கும் 60 சதவீதம் மானியத்தில் கடனுதவியும், மற்ற பிரிவினருக்கு 40 சதவீதம் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்படுகிறது.
சிறந்த புதுச்சேரி
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பத்துக்கு தலா ரூ.4,500 வீதம் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. புதுவையில் 76 ஆயிரம் குடும்பத்துக்கு இந்த உதவி வழங்கி வருகிறோம். ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்த மோட்டார் படகுகள் வாங்க ரூ.1 கோடியே 65 லட்சம் மானியம் வழங்கியுள்ளோம். 54 ஆயிரம் மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிறந்த புதுச்சேரியை உருவாக்க புறவழிச்சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1 லட்சம் பேரை புதுவையில் இணைத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,830 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.30 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
புதிய சட்ட மசோதா
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தொடர் உயிரிழப்பு நடந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மீனவர் மீது கூட துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. எல்லைதாண்டி சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
விசைப்படகுகளை மீட்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்குள் சர்வதேச அளவிலான கப்பல்களில் வந்து எல்லை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்ற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமியுடன் சந்திப்பு
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.