முதுமலை பகுதியில் திடீரென புலி சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்..!

முதுமலை சாலையில் புலி ஒன்று திடீரென கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் முதுமலை சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-07 15:18 GMT
கூடலூர்:

கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. கூடலூர், முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மட்டுமின்றி அரசு பஸ்கள், சரக்கு லாரிகள் இயக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முதுமலை வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டது.  இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விலங்குகள் இடம்பெயர்ந்த நிலையில் சாலையில் அதன் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

தற்போது கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

மேலும் குளுகுளு சீசனை அனுபவிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் முதுமலை சாலைகளில் வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் சுற்றுலாப்பயணிகள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இதனிடையே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  உத்தரவை மீறி வாகனங்களை வேகமாக இயக்கினால் அல்லது வனப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்