மேலூர் அருகே வெள்ளரி கண்மாயில் மீன்பிடி திருவிழா...!
மேலூர் அருகே வெள்ளரி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரி உள்ளது. விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாயை சுற்றி காத்திருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
அப்போது சுற்றி இருந்த மக்கள் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்த கச்சா, வலை, கூடை போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இதில் நாட்டு வகை மீன்களான விரால், கட்லா, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் அவர்களுக்கு கிடைத்தது.