திருப்பூர்: அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்...!

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

Update: 2022-05-05 09:55 GMT
சேவூர்,

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், கருணாம்பிகையம்மன் உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் திருத்தலம் விளங்குகிறது. 

இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத்தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

முன்னதாக கோவிலில் உள்ள பஞ்சலோகத்தாலான கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. யாகசாலை முன் மண்டபத்திலும், கொடிமரத்தின் முன்புறமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலி பீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. 

கொடித் துணியில் அதிகாரநந்தி, சூரிய, சந்திரன், சிவலிங்கம் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. மேலும் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

திருவிழாவை ஒட்டி தினசரி சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. வரும் 9-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தலும், கரிவரதராஜப்பெருமாள் கோவில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகிறது. 11-ந் தேதி அதிகாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 13 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.16-ந் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவ நிகழ்ச்சியும், 17-ந் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 18 - ந் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்