தருமபுர ஆதீனத்தை தோளில் சுமக்க நானே நேரில் வருவேன் - அண்ணாமலை டுவீட்

தருமபுர ஆதீனத்தை தோளில் சுமக்க நானே நேரில் வருவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-04 07:32 GMT
சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!.

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது.  ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார்.

தருமபுர ஆதீன நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தமிழக பாஜக தயாராக இருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்