பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் தொடக்கம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Update: 2022-05-04 07:12 GMT
சென்னை,

4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று கூடியது. 

அதன்படி, இன்று கூடிய சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ கருணாநிதி, பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

2022-2023-ஆம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 KV புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

கடந்த ஓராண்டில் 47 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 6.65 லட்சம் மின் நுகர்வோரைக் கொண்ட தாம்பரம் கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்