கன்னிவாடி வனச்சரகத்தில் காட்டு யானைகளை விரட்ட களமிறங்கிய கும்கி யானைகள்
கன்னிவாடி வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி இன்று முதல் தொடங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்,
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் திண்டுக்கல் கன்னிவாடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து காட்டு யானைகளை வனத்தில் விரட்டுவதற்கு வியூகம் அமைப்பட்டுள்ளது.
அதன்படி மலையடிவாரத்தில் தற்காலிக முகாமை வனத்துறை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இந்த முகாமிற்கு 2 கும்கி யானைகளும் அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகளும், சிறப்பு பயிற்சி பெற்ற 50 வன ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இன்று இரவு முழுவதும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து காலையில் காட்டு யானைகள் இருக்கும் பகுதிகளுக்கு கும்கி யானைகளை அழைத்துச் சென்று, அவற்றை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.