திருவண்ணாமலை: சுற்றுலா வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
திருவண்ணாமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாவேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை:
தர்மபுரி பகுதியில் இருந்து சுற்றுலாவேன் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கம் அடுத்துள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(வயது 46), மணி (45), பிரபு (30) உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.