இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக அரசுக்கு நன்றி - இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா....!

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக அரசுக்கு, இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா நன்றி தெரிவித்தார்.

Update: 2022-04-30 08:56 GMT
திருச்செந்தூர்,

இலங்கை வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா நேற்று  திருச்செந்தூர் வந்தார். அவர் கோவில் வாசல் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கினார். பின்னர் இன்று காலை 8.40 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின்னர், அவர் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில், மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.

இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகள் தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும். இந்தியா போல் மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்