லண்டன் நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கவுரவிப்பு

கலைத்துறையில் அளித்த பங்களிப்பினை பாராட்டி லண்டன் நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கவுரவிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

Update: 2022-04-29 20:52 GMT
சென்னை,

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மணி நேரம் சின்னத்திரையிலும் ஜொலித்திருக்கிறார். இதுதவிர திரைப்படம் சார்ந்த கம்பெனியையும் வெற்றிக்கரமாக நடத்தி வருகிறார். கலைத்துறையில் எந்தவொரு இடைவெளியும் இன்றி வலம் வருவது நடிகை ராதிகா சரத்குமார் தான்.

கலைத்துறைக்கு ராதிகா சரத்குமார் அளித்த பங்களிப்பினை அறிந்து, இங்கிலாந்தில் உள்ள தமிழர்களின் முன்னெடுப்பாக கருதப்படும் தமிழ்த்துறை (தமிழ் ஸ்டடிஸ் யூ.கே.) மெய்சிலிர்த்துப்போனது. ‘தமிழ் ஸ்டடிஸ் யூ.கே.', பெண் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கவுரவித்து வருகிறது.

அந்தவகையில், கடந்த 19-ந் தேதி லண்டன் நாடாளுமன்றத்தில் வைத்து ராதிகா சரத்குமார் கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியை மார்த்தா மில்லர் எம்.பி. தொகுத்து வழங்கினார். இதற்கு முன்பு இதுபோல யாரும் கவுரவிக்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்த்துறை வளர்ச்சிக்கு நன்கொடை

உலகின் மூத்த மொழியான தமிழ் மீது ராதிகா சரத்குமார் அதிக பற்றுக் கொண்டவர். ‘தமிழ் ஸ்டடிஸ் யூ.கே.' செம்மொழியான தமிழை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று விருப்பப்படுகிறது. இதற்காக நிதி திரட்டுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ராதிகா சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாகவும் வழங்கினார். தமிழின் வளர்ச்சிக்கு ராதிகா சரத்குமார் கொடுத்த பங்களிப்புக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மொழி ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சந்தோசம்

லண்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது குறித்து ராதிகா சரத்குமார் கூறுகையில், “கலைத்துறையில் எந்தவொரு இடைவெளியும் இன்றி நான் தொடர்ச்சியாக கொடுத்து வரும் பங்களிப்பினை பாராட்டி, லண்டன் நாடாளுமன்றத்தில் வைத்து கவுரவித்து இருக்கிறார்கள்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த லண்டன் நாடாளுமன்றத்தில் என்னை பாராட்டியதும், என்னை பேச வைத்ததும் சந்தோசமாக இருந்தது” என்றார்.

மேலும் செய்திகள்