கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-29 05:23 GMT
கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில்  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ராய், சம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தற்போது கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார், முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில்,  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம்  போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.  சசிகலா, ஆறுக்குட்டி, சஜீவன், சிபியை தொடர்ந்து பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை சுமார் 220 பேரை தனிப்படை விசாரித்துள்ளது. 

மேலும் செய்திகள்