உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - ஐகோர்ட்டு தீர்ப்பு

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-04-28 22:17 GMT
சென்னை,

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு (2021) நடந்தது. இந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க., சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த தொகுதி வாக்காளர் பிரேமலதா என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வேட்பு மனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். தன் மீதான வழக்குகளின் முழு விவரங்களை அதில் குறிப்பிட வில்லை. இவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை தெரிவித்தும், அதை ஏற்கவில்லை. எனவே, உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவையும், அவர் பெற்ற வெற்றியையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு

இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வேட்புமனுவில் வழக்கு விவரங்களை மறைக்கவில்லை. அதனால்தான், என் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. என்னை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. எனவே பிரேமலதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார்,

ரத்து

அதில், "உதயநிதி ஸ்டாலின் மீது பதிவான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையிலும், கோர்ட்டில் விசாரணைக்கு வராத நிலையிலும், அந்த வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். பிரேமலதா தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, உதயநிதி ஸ்டாலின் மனுவை ஏற்றுக்கொள்கிறேன். பிரேமலதாவின் தேர்தல் வழக்கை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்