தமிழகத்தில் புதிதாக தொழு நோய் கண்டறியப்பட்டால் உடனே தெரியப்படுத்த வேண்டும் - சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்படும் தொழுநோயாளிகள் குறித்த விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறைஉத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-04-26 18:22 GMT
சென்னை,

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொழுநோய் தொற்றானது நோயாளிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை உருவாக்குவதுடன், அதனைக் கவனிக்காவிட்டால் உடல் உருக்குலைந்து தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை வழங்குவது மட்டுமே அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி, தொழுநோயானது அறிவிக்கை செய்யப்பட்ட ஒரு நோயாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக அந்த வகை நோய் கண்டறியப்பட்டால், அதுகுறித்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள், நகர சுகாதார அலுவலர், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தாமதிக்காமல் தகவல் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம்.

அவ்வாறு அல்லாமல் தொழுநோய் குறித்த விவரங்களை தெரியப்படுத்தாமல் மறைத்தால் அது தண்டனைக்கும், அபாராதத்துக்கும் உரிய குற்றமாகும். எனவே, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள், மாநகராட்சி, நகராட்சி, நகர சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்டறியப்படும் புதிய தொழுநோய் குறித்த தகவல்களை தெரியப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்