40 நாட்களில் 16 முறை உயர்ந்த பெட்ரோல்- டீசல் விலை
கடந்த 40 நாட்களில் 16 முறை பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டதால் சராசரியாக ரூ.10 அதிகரித்துள்ளது. தமிழகத்தை விட குறைவு என்பதால் புதுச்சேரிக்கு வாகனங்கள் படையெடுக்கின்றன.
கடந்த 40 நாட்களில் 16 முறை பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டதால் சராசரியாக ரூ.10 அதிகரித்துள்ளது. தமிழகத்தை விட குறைவு என்பதால் புதுச்சேரிக்கு வாகனங்கள் படையெடுக்கின்றன.
வாகன பெருக்கம்
மக்களின் போக்குவரத்து எப்போதும் அத்தியாவசிய தேவையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் வீட்டுக்கு வீடு இருசக்கர மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு ஈடுகட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாலை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
பொது போக்குவரத்தை நம்பி இருந்த காலம் மாறி வரும் சூழ்நிலையில் தனி வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. இதற்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த விலை கார்களை தயாரிப்பதும் அதை சுலப தவணை முறையில் சந்தைப்படுத்துவதும் மற்றொரு காரணமாகும்.
அடக்க விலையை விட இருமடங்கு வரி
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதன்பிறகு அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் முடிவுக்கு விடப்பட்டு தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
அதாவது, பெட்ரோல், டீசல் விலை அன்றாட சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.
அதாவது, அதிகபட்சமாக பெட்ரோல், டீசலுக்கு 69 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது அடக்க விலையைவிட இரு மடங்கு அதிகமாகும். இந்த வரியின் மூலம் உயர்த்தப்படும் தொகை, தினசரி விலை நிர்ணயத்தின்படி மாநிலங்களுக்கு மாநிலம் சில பைசாக்கள் தொடங்கி, 10 ரூபாய் வரை வேறுபடுகிறது.
மத்திய, மாநில அரசுகள் சலுகை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தினசரி விலை நிர்ணயம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான் தற்போதைய பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கான முக்கியக் காரணமாகும்.
கொரோனா பரவலுக்கு அடுத்தபடியாக, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது.
புதுவையில் கடந்த 4.11.2021 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.79, டீசல் 102.66 என விற்பனையானது. இத்தகைய சூழலில் மத்திய அரசு கலால் வரியில் பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10 என்றும் குறைத்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் மக்கள் பயன்பெறும் வகையில் தனது பங்கிற்கு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை சுமார் 7 ரூபாய் குறைத்து சலுகை அளித்தது.
இதன் மூலம் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.85-ம், டீசல் விலை சுமார் ரூ.19-ம் குறைந்தது. அதாவது பெட்ரோல் லிட்டர் ரூ.94.94-க்கும், டீசல் ரூ.83.58-க்கும் விற்பனையானது. இந்த விலை குறைப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102-க்கு விற்பனையானது. இதனால் பெரும்பாலானோர் பெட்ரோல், டீசல் போடுவதற்காக புதுவைக்கு படையெடுக்க தொடங்கினர்.
16 முறை உயர்வு
இந்தநிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன் புதுவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.44, டீசல் ரூ.83.58 என விற்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் 137 நாட்களுகுப் பின் தொடர்ச்சியாக எரிபொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 40 நாட்களில் மட்டும் 16 முறை பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை புதுவையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.84, டீசலுக்கு ரூ.9.61 அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.78, டீசல் ரூ.93.14க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.112, டீசல் 102.06-க்கு விற்பனையானது. புதுச்சேரியில் இது சராசரியாக பெட்ரோலுக்கு ரூ.7, டீசலுக்கு ரூ.9 குறைவு ஆகும்.
வாகனங்கள் படையெடுப்பு
இதனால் மாநில எல்லையை யொட்டியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றன. சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வரும் தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களும் இங்கு வந்து பெட்ரோல் நிரப்புகின்றன.
புதுச்சேரி வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் முழுவதுமாக எரிபொருள் நிரப்பி செல்கின்றன. சுற்றுலா பயணிகளும் தங்கள் வாகனங்களுக்கு இங்கு தான் பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணத்துக்கான செலவு அதிகரித்து தினசரி காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்து தான் புதுவைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மக்களின் அத்தியாவசியமாக விளங்கும் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.