மணமேல்குடி அருகே தொழில்அதிபர் கொலை-கொள்ளை சம்பவம்: 6 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு

மணமேல்குடி அருகே தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டதில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-26 18:02 GMT
புதுக்கோட்டை:
தொழில் அதிபர் கொலை சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது52). தொழில் அதிபரான இவர் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டின் முன்பக்க வரண்டாவில் அமர்ந்து செல்போனை பார்த்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் 3 பேர் திடீரென வந்து அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, வீட்டினுள் புகுந்து அவரது மனைவி ஆயிஷா பீவியை கை, கால்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 170 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றனர். 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமா?
தொழில் அதிபரான முகமது நிஜாம் கொலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதாவது இந்த கொலை நகைக்காக நடந்ததா? அல்லது முன் விரோதம் மற்றும் தொழில் போட்டி, கொடுக்கல், வாங்கல் பிரச்சினையால் நடந்ததா? அல்லது வேறெதுவும் காரணம் உள்ளதா? என விசாரிக்கின்றனர். கொலை சம்பவம் நடந்த இடம் மீனவ கிராமம் ஆகும். 
இங்கு வெளிநபர்கள் யாரும் எளிதில் வந்துவிட முடியாது. அதனால் நன்கு தெரிந்த நபர்களே திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சம்பவம் நடந்த வீடு மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்களது புலன் விசாரணையை வேறு விதத்தில் தீவிரமாக கையாண்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை
ஆவுடையார்பட்டினம் பகுதி கடற்கரையோரம் அமைந்துள்ள கிராமம் ஆகும். இந்த ஊரின் அருகே தான் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. கொலையாளிகள் கொலை செய்த பின் காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தப்பி சென்றிருக்கலாமோ? என கருதி விசாரிக்கின்றனர். மேலும் அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.  இதேபோல கொலையான முகமது நிஜாமின் செல்போன் அழைப்புகளை வைத்தும், அதில் பதிவாகி உள்ள எண்களை வைத்தும், அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுர சிக்னலில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் பட்டியலிட்டு விசாரிக்கின்றனர். இந்த பட்டியலை வைத்து விசாரிப்பதில் போலீசாருக்கு கைக்கொடுக்கும் என நம்புகின்றனர்.
பழைய குற்றவாளிகள் பட்டியல்
இதேபோல நகைக்காக இந்த கொலையை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றனரா? என்பதில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட பழயை குற்றவாளிகளின் பட்டியலை வைத்தும் விசாரிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம். எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் விசாரிக்கின்றோம். கொலையாளிகளை பிடித்துவிடுவோம்’’ என்றார்.
தொழில் அதிபரை கொன்ற பின் மனைவியிடம் பரிவு:
எடுத்த நகைகளில் 20 பவுனை மீண்டும் பெட்டகத்தில் வைத்தனர்
சாப்பிட்டீங்களா...அம்மா... என நலம் விசாரிப்பு; மர்மநபர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள்

தொழில் அதிபர் முகமது நிஜாமை கொலை செய்த பின் அவரது மனைவியிடம் பரிவு காட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
முகமூடி அணிந்த மர்மநபர்கள்
மணமேல்குடி அருகே தொழில் அதிபர் முகமது நிஜாமை கொலை செய்த பின் வீட்டிற்குள் மர்மநபர்கள் 2 பேர் மட்டும் உள்ளே சென்றுள்ளனர். மற்றொருவர் வீட்டின் வாசலில் நின்றிருக்கிறார். அப்போது வீட்டினுள் அவரது மனைவி ஆயிஷா பீவி சமையல் அறையில் இட்லி சமைத்து கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் 2 பேர் வருவது போல உணர்ந்த அவர் யாருப்பா? வாங்கப்பா? என அன்போடு அழைத்திருக்கிறார். 
ஆனால் அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்ததோடு, கையில் கையுறை அணிந்து கத்தியை வைத்திருந்தனர். இதனால் ஆயிஷா பீவி அதிர்ச்சியடைந்தார். அவரிடம் நாற்காலியில் உட்காருமாறு மர்மநபர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆயிஷா பீவியின் கை, கால்களை துணியால் கட்டியுள்ளனர்.
20 பவுன் நகைகளை...
அதன்பின்னர் நகைகள், பணம் எங்கு உள்ளது என்று கேட்டனர். அதற்கு ஆயிஷா பீவி லாக்கரில் உள்ளது என தெரிவித்துள்ளார். சாவி எங்கே என மர்மநபர்கள் கேட்டுள்ளனர். அதன்பின் சாவியை அவர் எடுத்து கொடுத்திருக்கிறார். அப்போது சாவியால் அந்த லாக்கரை மர்மநபரால் திறக்க முடியவில்லையாம். இதனால் ஆயிஷா பீவியிடம் லாக்கரை திறக்க கூறியிருக்கின்றனர். இதற்காக அவரது கைகளில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தும் விட்டிருக்கின்றனர். அதன்பின் அவர் அந்த லாக்கரை திறக்க அதில் உள்ள நகைகளை எடுத்துள்ளனர். அந்த நகைகளை அவரது வீட்டில் இருந்த ஒரு பையில் எடுத்து வைத்துள்ளனர். 
இதனை பார்த்த ஆயிஷா பீவி, அய்யா.... எல்லா நகைகளையும் எடுத்துவிடாதீர்கள். கல்யாண பெண்ணுக்குரிய நகையும் அதில் இருக்கு எனக்கூறியிருக்கிறார். இதனால் மர்மநபர்கள் சுமார் 20 பவுன் நகைகளை மீண்டும் பெட்டகத்தில் வைத்திருக்கின்றனர்.
வளையல்கள் அணிவித்தனர்
பின்னர் ஆயிஷா பீவி கைகளில் கிடந்த வளையல்களை கவனித்து அதனை கழற்ற கூறியிருக்கின்றனர். 2 கைகளில் தலா 5 வளையல்கள் அணிந்திருந்ததில் அனைத்தையும் அவர் கழற்றி கொடுத்திருக்கிறார். அப்போது 8 வளையல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, 2 வளையல்களில் தலா ஒன்றை அவரது 2 கைகளிலும் மர்மநபர் அணிவித்திருக்கிறார். 
எல்லா நகைகளையும் கொள்ளையடித்த பின் அதனை பையில் அடைத்து விட்டு புறப்பட்டிருக்கின்றனர். அப்போது பரிவோடு, ஆயிஷா பீவியிடம் சாப்பிட்டீர்களா? அம்மா... என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் இல்லை... இனி தான் சாப்பிட வேண்டும்... இட்லியை அடுப்பில் வைத்துள்ளேன்... எனக்கூறியிருக்கிறார். அதன்பின் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
25 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள்
ஆயிஷா பீவி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். மேற்கண்ட தகவலை அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் 25 வயது முதல் 30 வயதிற்குட்டபட்டவர்கள் தான் இருக்கும் என்றும் அவர் அடையாளத்தை தெரிவித்திருக்கிறார். 
இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொழில் அதிபரை கொன்ற பின் நகைகளை கொள்ளையடித்த போது அவரது மனைவியிடம் மர்மநபர்கள் பரிவோடும், பாசத்தோடும் செயல்பட்டுள்ளனர். இதனால் கொலையாளிகள் நன்கு தெரிந்த நபர்களாக இருக்கலாமா? எனவும் விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்