அம்பேத்கர் பிறந்தநாளில் மோதல்: நடிகை காயத்ரி ரகுராமுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை காயத்ரி ரகுராமுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் வந்தனர். அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுகுறித்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க. கலை மற்றும் கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் மனு தாக்கல் செய்தார். அதில், சமூக ஊடகங்களில் திருமாவளவனை முன்பு விமர்சித்ததால் இந்த தகராறு நடந்தது. ஆளும் கட்சி கூட்டணியில் இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் புகாரின் அடிப்படையில் எங்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 30 நாட்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் காயத்ரி ரகுராமுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.