10 11 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின.
புதுச்சேரி
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின.
செய்முறை தேர்வு
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றுக்கு பின்னர் இந்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை அறிவித்தது. அந்தவகையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 6-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 5-ந்தேதி தொடங்கி மே 28-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த பொதுத்தேர்வுக்கு முன்னதாக நடத்தப்படும் செய்முறை தேர்வுகளுக்கு தேவையான முன்னேற்பாடாக பள்ளிகளில் உள்ள வேதியியல், இயற்பியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் (லேப்) நேற்று முன்தினமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கப்பட்டு, 12 மணிக்கு முடிவடைந்தன. மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப குழுக்களாக பிரிக்கப்பட்டு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதைப்போல 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடந்தது.
2 மணி நேரம்
இதற்காக வெளி பள்ளிகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் ஆய்வகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு 30 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடுகளாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மற்ற 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு எழுத உள்ளனர். வழக்கமாக 3 மணி நேரம் செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு பள்ளிகளின் பரிந்துரையின் அடிப்படையில் செய்முறை தேர்வு நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்முறை தேர்வு நடைபெறும் முதல் நாளான நேற்று மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். செய்முறை தேர்வுக்கு வந்த மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டு செய்முறை தேர்வு நடைபெற்றது.
புதுச்சேரி முழுவதும் வரும் மே மாதம் 2-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.