கடை உரிமையாளர், மகன்கள் மீது தாக்குதல்
வேலையில் இருந்து நீக்கியதால் கடை உரிமையானர் மற்றும் மகன்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் வில்லியனூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 53). இவர் தனது வீட்டின் அருகில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இங்கு வேலை செய்த சுதாகர் என்பவர் பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முருங்கப்பாக்கம் சுடுகாட்டில் நடைபெற்ற ஒருவரது இறுதி சடங்கில் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு விட்டு வந்தபோது, சுதாகரின் அண்ணன் சேகர் அவரது கூட்டாளிகள் தமிழ்வேந்தன், மகேந்திரன், பிரவீன் ஆகியோர் சேர்ந்து தட்சிணாமூர்த்தியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி சுதாகரை எப்படி வேலையை விட்டு நீக்கலாம் என கேட்டு தாக்கினர். இதனை தடுக்க முயன்ற தட்சிணாமூர்த்தியின் மகன்களையும் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.