பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
கூத்தாண்டவர் கோவில்
வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கூத்தாண்டவர் சாமி திருக்கல்யாணம், பக்தர்கள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அழகிப்போட்டி
விழாவில் திருநங்கைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய உடைகள், அணிகலன்கள் அணிந்து தாலிக் கட்டிக் கொண்டனர். தொடர்ந்து மிஸ் பிள்ளையார்குப்பம் அழகிப்போட்டி நடந்தது. மேலும் திருநங்கைகளுக்கு பேஷன் ஷோ, நடனம், பொது அறிவு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுவையை சேர்ந்த கரிஷ்மா மிஸ் பிள்ளையார்குப்பம் பட்டத்தை வென்றார். அவருக்கு ஐ.ஜி.சந்திரன் ஒரு பவுன் தங்கக்காசு பரிசாக வழங்கி பாராட்டினார்.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று கூத்தாண்டவர் திருத்தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சாய் சரவணன்குமார் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை அரவான் களப்பலி அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருநங்கைகள் தாலி அறுத்து, வெள்ளைப்புடவை அணிந்து கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.