மயிலாடுதுறை சம்பவம்: கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு கடிதம்..!!
மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று சென்றிருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
கவர்னருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கவர்னர் ரவி சென்ற வாகனத்தின் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கவர்னரின் வாகனம் சென்றபோது அங்கு கூடி இருந்தவர்கள் கார்களை நோக்கி கொடிகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி கவர்னரின் கான்வாய் கடந்து சென்றது. கவர்னரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது சட்டப்பிரிவு 124-ன்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.