புதுச்சேரிக்கு புதிய கவர்னர் நியமனமா?
புதுவைக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவைக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடு
புதுவை கவர்னராக இருந்த கிரண்பெடி பதவிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக புதுவை கவர்னர் பொறுப்பினை தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் கவனித்து வருகிறார். அவர் தெலுங்கானாவில் இருந்து அவ்வப்போது புதுச்சேரி வந்து பணிகளை கவனிக்கிறார்.
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை தற்போது எடுத்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது.
அதிகாரிகள் புறக்கணிப்பு
இந்த மோதலின் உச்சகட்டமாக கவர்னர் உரை இல்லாமலேயே தெலுங்கானா சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகளும் கவர்னரை புறக்கணித்து உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது புதுவை மாநிலத்துக்கு தொலைநோக்கு திட்டங்கள் குறித்து அவர் பிரதமரிடம் பேசியதாக தெரிவித்திருந்தார்.
தேனீர் விருந்து
இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை மத்திய அரசு திரும்பப்பெற்று நிரந்தர கவர்னரை புதுச்சேரிக்கு நியமிக்கவேண்டும் என்று தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேனீர் விருந்து அளித்தார். அந்த விருந்தை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. கவர்னரின் செயல்பாடு தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.
சமூக வலைதள தகவல்கள்
இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவந்தரராஜனை டெல்லி வருமாறு மத்திய அரசு அழைத்ததாக கூறப்படுகிறது. அதனையேற்று அவர் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் யாரை சந்தித்தார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே புதுவையில் புதிய கவர்னர் நியமனம் தொடர்பான தகவல்கள் நேற்று சமூக வலைதளங்களில் பரவின. குறிப்பாக பா.ஜ.க. மேலிட பார்வையாளரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுவை புதிய கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக அந்த தகவல்களில் கூறப்பட்டிருந்தது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான நிலை நிலவுகிறது.