தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
புதுச்சேரியில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியர்
புதுச்சேரி நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் மோகன செல்வம் (வயது 47). இவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூரணி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் தினமும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு கல்லூரிக்கு செல்வது வழக்கம். கடந்த 15-ந் தேதி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்தனர். அப்போது அதில் 20 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது. ஆனால் வீட்டின் ஜன்னல், கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. எனவே அவர்கள் குடும்பத்துடன் நன்கு அறிமுகம் ஆன நபர் தான் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
விசாரணை
நகைகள் மாயமானது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் மோகன செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர்.
நகை திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் மோகனசெல்வத்தின் உறவினர்கள், நண்பர்களை அழைத்தும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.