மணல் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் கைது
வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணல் கடத்திய லாரியை போலீசார் துரத்திப் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணல் கடத்திய லாரியை போலீசார் துரத்திப் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் அர்ச்சுனன் ஆகியோர் இரவு அரும்பார்த்தபுரம் புதிய பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வில்லியனூரில் இருந்து புதுச்சேரி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை சோதனை செய்வதற்காக போலீசார் வழிமறித்தனர்.
ஆனால் அந்த லாரி நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. உடனே போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்று மூலக்குளம் பகுதியில் வழிமறித்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
உடனே போலீசார் அந்த லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், அந்த லாரியின் உரிமையாளர் வில்லியனூர் உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்கிற அருண் (வயது 32), கூடப்பாக்கம், அகரம் புதுநகரை சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார் (23) என்பது தெரியவந்தது.
திருக்காஞ்சியில் இருந்து மணலை எடுத்து வந்து புதுவையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.