ராமேஸ்வரத்தில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்...!
ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.
ராமநாதபுரம்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. இந்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில பெய்த மழையால் குற்றாலம், திற்பரப்பு, உடுமலை பஞ்சலிங்க அருவிகள் போன்றவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோடை காலத்தின் வெப்பத்தை தனிக்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதிலும் உடுமலை பஞ்சலிங்க அருவிகள் மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்தனர்.
இப்படி தமிழகதில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களாகவே ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.