திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி நேற்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைந்தது. சித்ரா பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 4 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
காலை சுமார் 10 மணி வரை ஏராளமான பக்தர்கள் சாலையை அடைத்தபடி கிரிவலம் சென்றனர். கோடை காலம் என்பதால் நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இருப்பினும் பலர் சாலையில் நடந்து செல்லாமல் நிழல் எங்கு உள்ளது என்று பார்த்து, பார்த்து நடந்து சென்றனர். சிலர் தரையின் சூடு தாங்காமல் சாலையில் ஓடிச் சென்றனர்.
கிரிவலப்பாதையில் காணும் இடமெல்லாம் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. லாரியில் மோர் எடுத்து வந்து தண்ணீர் பந்தலில் உள்ள டிரம்களில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.