செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பள்ளி மாணவர்கள் பிடிபட்டனர்..!

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு பள்ளி மாணவர்களை போலீசார் பிரித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-04-16 12:01 GMT
சென்னை, 

சென்னை பட்டினம்பாக்கம் பவானிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 25). இவர் கடந்த 10-ந்தேதி அன்று இரவு 11.15 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மொபட் வாகனத்தில் வந்த 2 பேர் அவருடைய செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் ராஜசேகர் சுதாரித்துக் கொண்டதால் அவரது செல்போன் தப்பியது.

செல்போன் பறிப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததால் அந்த 2 பேரும் ராஜசேகருக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜசேகர், அண்ணாசதுக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி வழக்குப்பதிவு செய்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் ராஜசேகரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ராயபுரத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனும், பெசன்ட் நகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனும் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். 

விசாரணையின்போது இவர்கள் 2 பேரும் அடையாறு பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்து தப்பியதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் பள்ளி மாணவர்கள் 2 பேரும் கெல்லீசில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்