விஷவாயு தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

திருமுல்லைவாயலில் தண்ணீர் ெதாட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-04-16 00:10 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சிவசக்தி நகர் 52-வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 50). இவருடைய மனைவி ரதி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் காயத்திரிக்கு திருமணமாகி தாம்பரத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

2-வது மகள் சங்கீதா, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஒரே மகனான பிரதீப்குமார் (18), பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார்.

பிரேம்குமார் தனது மனைவி, 2-வது மகள், மகனுடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். இவர்களது வீட்டின் முன்புறம் குடிநீர் சேமிப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்தில் தரை மட்டத்தில் தண்ணீர் தொட்டி (சம்ப்) அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தண்ணீரை சேமித்து வைத்து மோட்டார் மூலம் மாடியில் குடிநீர் தொட்டிக்கு ஏற்றி பயன்படுத்தி வந்தனர். சம்ப் முழுவதுமாக மூடப்பட்டு சுமார் 2 அடி அகலத்துக்கு மட்டும் உள்ளே இறங்கி சுத்தம் செய்வதற்காக வழி அமைக்கப்பட்டு, படிக்கட்டுகள் வைத்து கட்டப்பட்டு உள்ளது.

விஷவாயு தாக்கியது

நேற்று முன்தினம் பிரேம்குமார் ஆட்களை வைத்து தண்ணீர் ெதாட்டியை சுத்தம் செய்து, உள்ளே பிளீச்சிங் பவுடர் போட்டார். அதில் 2 அடி அளவுக்கு மட்டும் தண்ணீர் இருந்தது.

நேற்று காலை தண்ணீர் தொட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்குமார் தண்ணீர் தொட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள படி வழியாக உள்ளே இறங்கினார். அப்போது அவரை விஷவாயு தாக்கியதால் உள்ளே மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் பிரதீப்குமார், தந்தையை மீட்க தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரதி, கணவர், மகன் இருவரையும் காப்பாற்ற எதிர் வீட்டில் வசிக்கும் சாரநாதன் (40) என்பவரை உதவிக்கு அழைத்தார். தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய அவரையும் விஷ வாயு தாக்கியதால் மயங்கி விழுந்தார். பின்னர் எதிர்வீட்டில் வசிக்கும் மற்றொரு நபரான பிரமோத் என்பவரை உதவிக்கு அழைத்தார். தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்க முயன்ற பிரமோத்தும் விஷ வாயு தாக்கி மயங்கினார். அடுத்தடுத்து 4 பேர் தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 பேர் பலி

இதையடுத்து ரதி மற்றும் அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மிகுந்த சிரமப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி, உள்ளே மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

பின்னர் பிரேம்குமார் மற்றும் அவருடைய மகன் பிரதீப்குமார் இருவரையும் அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சாரநாதன் மற்றும் பிரமோத் இருவரையும் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் பிரமோத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சாரநாதன், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் பலியான பிரேம்குமார், அவருடைய மகன் பிரதீப்குமார் மற்றும் பிரமோத் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்