மணக்குள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு மற்றும் குருப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மணக்குள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-14 18:03 GMT
தமிழ் புத்தாண்டு மற்றும் குருப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மணக்குள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

அதிகாலை நடை திறப்பு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதி காலையிலேயே மக்கள் சாமிதரிசனம் செய்ய கோவில்களுக்கு சென்றனர்.
மணக்குள விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாச பெருமாள், ராமகிருஷ்ணநகர் லட்சுமி ஹயக்ரீவர், ரெயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்ரமணியர், முத்திரையர்பாளையம் பெருமாள், சாரம் கிருஷ்ணர் உள்ளிட்ட கோவில்கள் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பிள்ளைச்சாவடி கமய சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், பல்லக்கு உற்சவம், அன்னதானம் நடந்தது. 
கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மணக்குள விநாயகர் தங்கக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

குருப்பெயர்ச்சி

குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இன்று அதிகாலை 4.16 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி கருவடிக்குப்பம் சித்தானந்த சாமி கோவிலில் குரு பகவானுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தன.
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு மகாதீபாரதனையும் நடந்தது. இதேபோல் காந்தி வீதி வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை பொன்னி மாரியம்மன், திலாசுப்பேட்டை கற்பக விநாயகர்,  இடையார்பாளையம் ஆதிசொர்ண பைரவர், பூரணாங்குப்பம் குருதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்யப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்