தென் தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும்...!
தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக
இன்று (14.4.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடு. தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (15.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.04.2022 முதல் 18.04.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.