மாணவிகளை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பள்ளிப்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-04-13 23:10 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா. இவர், பொறுப்பேற்ற நாள் முதல் இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை தரக்குறைவாக பேசி, தரக்குறைவாக நடத்தியதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை ஜீவாவை ஊத்துக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளிக்கு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

மாணவிகள் போராட்டம்

இதனால் அந்த பள்ளியில் பணியாற்றி வந்த 5 ஆசிரியைகள், தாங்களாகவே முன்வந்து பணி இடமாற்றம் பெற்று சென்றுவிட்டனர். இதனால் இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவதிக்குள்ளானார்கள்.

இதையடுத்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை ஜீவாவை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, இந்த பள்ளியில் படிக்கும் ஒட்டுமொத்த மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளிப்பட்டு பஜார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிடை நீக்கம்

திருத்தணி கல்வி மாவட்ட அதிகாரி அருள் அரசு, ேபாராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமை ஆசிரியை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை ஜீவாவை கல்வித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். இந்த தகவலை அறிந்த பள்ளி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து, உரிய நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்