பள்ளி கல்லூரி மாணவிகள் கடத்தலா போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-12 13:19 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி இசையமுது (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 
முரளியின் பராமரிப்பில் மூத்த மகள் நிகிலழகி (17) இருந்து வந்தார். பிளஸ்-2 படித்து வரும் அவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததால் முரளி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிதாக தெரிகிறது. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி

புதுச்சேரி மேட்டுப்பாளையம் புகழேந்தி நகரை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகள் சுவேதா (வயது 18), லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சுவேதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மகளை கண்டுபிடித்து தருமாறு  லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்