அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை கோர்ட்டு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2022-04-12 00:04 GMT
சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பின்னர் அதே ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர், சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக பூகம்பம் கிளம்பியது.

2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதுதொடர்பான அறிவிப்பு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் (தற்போது இவர் மரணம் அடைந்து விட்டார்), ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் நிதி பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்த கரூர் வைஸ்யா வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் உள்ளிட்ட 9 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

சசிகலா தாக்கல் செய்த மனுவில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளரான நான்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவாக்கிய புதிய பதவி கட்சியின் சட்டத்திட்டத்துக்கு விரோதமானது. எனவே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டிய பொதுக்குழு கூட்டமும், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நிராகரிக்க கோரிக்கை

அதேபோன்று, 10.9.2017 அன்று தன்னால் நியமிக்கப்பட்ட கட்சியின் பொருளாளரை தவிர ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பிற நிர்வாகிகள் கட்சியின் நிதி பரிவர்த்தனை மேற்கொண்டு வரும் வங்கி கணக்குகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளுக்கு சசிகலா தீர்வு கோரியிருந்தார்.

சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்ததால் தேர்தல் கமிஷனில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோன்று திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை ஆகியோர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கியது செல்லும்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 11-ந் தேதி (நேற்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்திருந்தார்.

அதன்படி நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சசிகலா, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி அ.தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் சசிகலா, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கிய அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த பிரதான மனு நிலை நிற்கத்தக்கதல்ல. எனவே, சசிகலாவின் பிரதான மனுவும் நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.

சட்ட ரீதியான வெற்றி

இந்த தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சட்ட ரீதியான வெற்றி கிடைத்துள்ளது.

அவர்கள் இருவரும் தொடர்ந்து அ.தி.மு.க.வை வழிநடத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்