தமிழ் புத்தாண்டு புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாடங்களை விரைந்து முடிப்பதற்கு வசதியாக வாரத்தில் 6 நாட்களும், அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வருகிற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு, 15-ந்தேதி புனித வெள்ளி வருகிறது. இது அரசு விடுமுறை நாட்களாகும். அடுத்து வரும் சனிக்கிழமை (16-ந்தேதி) விடுமுறை விடப்பட்டால் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், அரசு ஊழியர்களிடையே கருத்து எதிர்பார்ப்பு மேலோங்கியது.
இதை நிறைவேற்றும் விதமாக பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள சுற்றறிக்கையில், புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16-ந்தேதி விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியுடன் வரவேற்பை பெற்றுள்ளது.