தரையில் தலையை மோதச்செய்து கொடூரம் - மெரினாவில் துப்புறவு தொழிலாளி படுகொலை

சென்னை மெரினாவில் தரையில் தலையை மோதச்செய்து துப்புறவு பணியாளரை கொடூரமாக கொலை செய்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-10 13:27 GMT
சென்னை:

சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் பச்சை என்ற பச்சையப்பன் (வயது 50). இவர் துப்புறவு பணி செய்பவர். இவர் இன்று காலை வேலைக்கு போகாமல் மெரினாவில் நடைபாதையில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பச்சையப்பனை தாக்கி உள்ளனர். பின்னர் அவரை தரையில் தர தரவென இழுத்து சென்றுள்ளனர். 

பின்னர் கொலை வெறியுடன் பச்சையப்பனின் தலையை தரையில் மோதச்செய்து கொடூரமாக காலால் மிதித்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் பச்சையப்பன் கூச்சல் போட்டுள்ளார். இதை கேட்டு அங்கு பெண் ஒருவர் ஓடி வந்துள்ளார். அவர் அபயக்குரல் எழுப்பவே, தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

படுகாயமடைந்த பச்சையப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்களில் சிலர் கொண்டு சென்றுள்ளனர். தரையில் தலை மோதியதில் பலத்த காயம் அடைந்த பச்சையப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் கவுதமன் மேற்பார்வையில், மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார். அவர்கள் பிடிபட்டால் தான், பச்சையப்பன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பச்சையப்பனின் மனைவி இறந்து விட்டதாகவும், அவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் இருப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.

மேலும் செய்திகள்