நாகை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்..!

மழையில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-10 10:32 GMT
நாகை:

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடித்தெருவை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகன் ரகுராமன் (வயது 15). இவர் அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ரகுராமன் சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 10 மணி ஆகியும் மகன் வீட்டிற்கு திரும்பாததால் சங்கீதா, கஜேந்திரன் இருவரும் ரகுராமனை தேடியுள்ளனர். 

அப்போது வீட்டில் இருந்து ஆடு கொட்டகைக்கு செல்லும் மின் வயர் காற்றில் அறுந்து கிடந்துள்ளது. அதனை மிதித்ததில் ரகுராமன் மின்சாரம் தாக்கி மயங்கிக் கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ரகுராமை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு ரகுராமனை சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மழையில் மின்கம்பி அறுந்ததில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்