விழுப்புரம் அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது..!
விழுப்புரம் அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த பெரியபாபுசமுத்திரம் பம்பை ஆற்றங்கரை ஓரமாக உள்ள சுடுகாட்டு பாதை அருகில் சிலர் கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் பதுங்கியிருப்பதாக கண்டமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு பதுங்கியிருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 6 பேரும் புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த அன்பரசன் (வயது 30), ஞானசவுந்தர் (27), ரவீந்திரன் (29), விக்னேஷ் (19), தமிழரசன் (19), கோட்டக்குப்பத்தை சேர்ந்த செல்வகணபதி (28) என்பதும், இவர்கள் 6 பேரும் கூட்டாக சேர்ந்து அவ்வழியாக செல்பவர்களை வழிமறித்து பணம் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அன்பரசன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.