கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை - சுற்றுலா பயணிகள் பாதிப்பு..!

கொடைக்கானல் நகர் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2022-04-08 12:37 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அத்துடன் குளுகுளு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்றும் ஏராளமான வாகனங்களில் பயணிகள் குவிந்தனர். இதில் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவியர் வருகை அதிகளவில் இருந்தது. 

இதனிடையே இன்று காலை முதல் மேகமூட்டம் நிலவிய நிலையில் பகல் 12 மணி முதல் மாலை சுமார் நான்கு முப்பது மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
அத்துடன் பல்வேறு நீர்வீழ்ச்சிகளிலும் அதிக அளவு வெள்ளம் கொட்டியது.

திடீரென மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் கல்லூரி மாணவ-மாணவியர் ஏரிச்சாலையில் ஒதுங்குவதற்கு இடமின்றி மழையில் நனைந்தவாறே தங்களது வாகனங்களுக்கும், அறைகளுக்கும் திரும்பினர். 

மழையினை தொடர்ந்து மாலை குளிர் நிலவியது. கனமழை காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி வழியும் சூழ்நிலையில் உள்ளது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

கனமழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்டு வந்த தீ விபத்துகளுக்கு தீர்வு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்