“இளநிலை படிப்புக்கு நுழைவுத்தேர்வு கூடாது” - பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மத்திய அரசின் இந்தப் போக்கினை, மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே கருதுகிறோம். மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு(சி.யூ.இ.டி.) என்பது மத்திய அரசின் பிற்போக்குத் தனங்களில் ஒன்றாகவே உள்ளது. சி.யூ.இ.டி. தேர்வினால், மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி மையங்களை சார்ந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.